செய்திகள்
மம்தா பானர்ஜி ஆய்வு செய்யும் காட்சி

மேற்கு வங்காளத்தில் புல்புல் புயல் சேதம்: ஹெலிகாப்டரில் சென்று மம்தா பானர்ஜி ஆய்வு

Published On 2019-11-11 11:57 GMT   |   Update On 2019-11-11 11:57 GMT
புல்புல் புயல் தாக்கத்தினால் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏற்பட்ட சேத நிலவரங்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
கொல்கத்தா:

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம் நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது.  அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
 
வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது. இன்று பிற்பகல் வங்காள விரிகுடாவில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்தில் புல்புல் புயல் கடந்து சென்றது.

இந்நிலையில்,  மேற்கு வங்காளம் மாநிலத்தில் காற்றினால் மரம் முறிந்து விழுந்தும் மழையினால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தும் ஏற்பட்ட விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.



புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1.78 லட்சம் மக்கள் 471 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 323 சமுதாய சமையல் கூடங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், புயல், வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாம்கானா, பக்காலி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
 
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடார்பாக மாநில அரசின் தலைமை செயலாளர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ’6 லட்சம் மக்கள் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய காலத்தில் சிறப்பாக செயலாற்றியுள்ள அதிகாரிகள் மிகப்பெரிய பேரிடரை தவிர்த்துள்ளனர். மத்திய அரசின் பாராட்டை பெற்ற இவர்களின் பணிக்கான வெகுமதிகள் விரைவில் அளிக்கப்படும்’ என்றார்.
Tags:    

Similar News