search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல் சேதம்"

    ராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #prpandian #gajacycloneeffected

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது;

    காவிரி டெல்டாவில் கஜா புயல் தாக்குதலால் கிராமப்புறங்களில் விழுந்த மரங்கள், கழிவுகள் முழுமையாக அப்புறப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் கழிவுகளால் மாசடைந்து மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள், வயல்வெளிகளிலும், வாய்க்கால் கரைகளிலும் அமைந்துள்ளதால் இதனால் தொற்றுநோய் பரவி வருகிறது. காய்ச்சல், வயிற்றுப் போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக மன்னார்குடி வட்டம் கோட்டூர் நடுத்தெரு கிராமத்தில் காத்தான் மகன் பாண்டியன் (வயது 50) என்பவர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவரது மனைவி, மகன் வயிற்று போக்கு நோய் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கவேண்டும்.

    எனவே தமிழக அரசு விரைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீர் குடிப்பதற்கும், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை தவிர்ப்பதற்கும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    துணை ராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு உடன் புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் எந்திரங்களை வரவழைத்து தென்னை விளை நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இதனை வலியுறுத்தி தமிழக தென்னை உழவர்கள் சங்கம் சார்பில் வருகிற 4-ந்தேதி பட்டுக்கோட்டை-அறந்தாங்கி முக்கத்தில் உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னாள் தென்னை வாரிய உறுப்பினர் குருவிக்கரம்பை பழனிவேலு தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #prpandian #gajacycloneeffected

    தற்காலிகமாக குடிசை வீடுகள் அமைப்பதற்கு உதவுவதற்காக சேலத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து கஜா புயல் நிவாரணமாக 5 லாரிகளில் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டன. #Gajastorm

    தஞ்சாவூர்:

    கஜா புயல் தஞ்சை மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் தொடங்கி கடைகோடி பகுதியான அதிராம்பட்டினம் வரை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் உள்ள அனைத்து தென்னை, பனை மரங்கள், புளியமரங்கள், அரசமரம், ஆலமரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. இதில் ஏராளமான குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இது தவிர 15 ஆயிரம் குடிசை வீடுகள் பகுதியாகவும், 52 ஆயிரத்து 137 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.

    இது தவிர தென்னை மரங்கள் விழுந்ததில் ஏராளமான மாடி வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. வீடுகள் சேதம் அடைந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்குவதற்காக இடவசதி இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சிலர் தார்ப்பாய் மூலம் தற்காலிகமாக குடிசை போன்று அமைத்து அதில் வசித்து வருகிறார்கள். சிலர் அருகில் உள்ள மற்ற வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்காலிகமாக குடிசை வீடுகள் அமைப்பதற்கு உதவுவதற்காக சேலத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து கஜா புயல் நிவாரணமாக 5 லாரிகளில் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டன.

    இந்த மூங்கில்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மூங்கில்கள் பட்டுக்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை அமைப்பதற்காக வழங்கப்பட உள்ளன. #Gajastorm

    தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட புயல் சேதம் அதிகமாக உள்ளது என்று மத்தியக்குழு தலைவர் கூறியுள்ளார். #GajaCyclone #CentralCommittee

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மத்திய குழு ஆய்வு செய்தனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் மத்திய குழுவிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.

    எங்கள் பகுதியில் விசைபடகுகள், நாட்டுப்படகுகள், அதிக அளவில் சேதமாகி உள்ளது. இதனால் மல்லிப்பட்டினம், வேதுபாவச்சத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனர்வர்களின் 246 விசைப்படகுகளும், 832 நாட்டுப்படகுகளும், 47 கட்டுமரங்களும், ஆயிரத்து 428 வலைகள், ஆயிரத்து 440 மோட்டார் என்ஜின்கள் என பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.72 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் வரை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    எனவே பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகள் அரசுதர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்றனர்.

    பின்னர் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள இடங்களை இன்று காலை முதல் ஆய்வு செய்தோம். பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் சேதம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralCommittee

    கஜா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்த இடைக்கால அறிக்கை இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலுக்கு புதுவை அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புதுவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிய பாதிப்புகளும் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டது. காரைக்காலில் கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஒருவர் மட்டும் காயமடைந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 250-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சூறாவளி காற்றால் சேதமடைந்துள்ளது. மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அமைச்சர் கமலகண்ணன் காரைக்காலில் முகாமிட்டு அதிகாரிகளை முடுக்கி விட்டு பணிகளை செய்து வருகிறார். குடிநீர் கிடைக்காத இடங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வழங்கி வருகிறோம்.

    இதுவரை 80 சதவீத சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. காரைக்கால் சேத மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த அறிக்கை மத்திய அரசுக்கு இன்று அனுப்பப்படும்.

    காரைக்கால் மாவட்டத்தில் புயலால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.



    மீனவர்கள் கடந்த சில நாட்களாக புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் வேலை இழந்துள்ளனர். காரைக்காலில் சேதமடைந்த படகு, வலை ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

    புதுவை, காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்லாத காலத்திற்கு நிவாரணம் வழங்கவும் அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்து இடைக்கால நிவாரணமும் கோரியுள்ளோம்.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். #GajaCyclone #MinisterNamasivayam
    ×