செய்திகள்
சோனியா காந்தி மற்றும் சரத் பவார் (கோப்பு படம்)

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி? சோனியா காந்தியுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு

Published On 2019-11-04 14:14 GMT   |   Update On 2019-11-04 14:14 GMT
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முடியாமல் பாஜக திணறிவரும் நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியை சரத் பவார் இன்று மாலை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
புது டெல்லி:

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. 

இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியது. 

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 161 இடங்களை கைப்பற்றிய பாஜக - சிவசேனா கூட்டணியில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு தரவேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஏற்காததால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. 



இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா இணைந்து  கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 
Tags:    

Similar News