செய்திகள்
ஸ்ரீநகரில் பொதுமக்களுடன் ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு

காஷ்மீர் மக்களுடன் ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு சந்திப்பு

Published On 2019-10-29 15:11 GMT   |   Update On 2019-10-29 15:11 GMT
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீநகர் வந்துள்ள ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற எம்.பி.க்கள் குழுவினர் இன்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசினர்.
ஸ்ரீநகர்:

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தை சேர்ந்த எம்.பி.க்கள் குழு இந்தியா வந்துள்ளது.

டெல்லியில் நேற்று காலை பிரதமர் மோடியை இந்த குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்..
 
ஜம்மு-காஷ்மீர் சென்று ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து அங்குள்ள நிலவரத்தை கண்டறியவும், பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்தவும் இந்த குழுவினர்  விரும்பினர். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.



இதையடுத்து, டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் 23 பேரை கொண்ட ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழுவினர் ஸ்ரீநகருக்கு வந்தனர்.

அங்குள்ள ராணுவ அலுவலகத்தில் உயரதிகாரிகளை அவர்கள் சந்தித்தனர். காஷ்மீர் மக்களை பாதுகாப்பதாக பாசாங்கு காட்டும் பாகிஸ்தான் அங்கு தீவிரவாதத்தை வளர்க்கவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கவும் செய்து வரும் முயற்சிகளை ராணுவ உயரதிகாரிகள் எம்.பி.க்களிடம் விளக்கிக் கூறினர்.



இதை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களை அவர்கள் சந்தித்தனர்.


அங்கு நடைமுறையில் இருந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அரசியல்சார்ந்த தாக்கங்கள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.



பின்னர், ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான டால் ஏரியில் எம்.பி.க்கள் குழுவினர் இன்று மாலை படகு சவாரி சென்றனர்.

இன்றிரவு காஷ்மீர் கவர்னர் மற்றும் அரசு உயரதிகாரிகளை சந்திக்கும் அவர்கள் அல்லது நாளை டெல்லி திரும்புவார்கள். டெல்லி வந்த பின்னர் காஷ்மீர் மக்களின் தற்போதைய நிலை குறித்தும் அவர்கள் நேரடியாக கள ஆய்வு செய்தது தொடர்பாகவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Tags:    

Similar News