செய்திகள்
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி வீட்டில் நடைபெறும் காளி பூஜையில் பங்கேற்கிறார் மேற்கு வங்காள ஆளுநர்

Published On 2019-10-26 17:39 GMT   |   Update On 2019-10-26 17:39 GMT
மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி வீட்டில் நாளை நடைபெற உள்ள காளி பூஜையில் பங்கேற்க உள்ளதாக அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

துர்கா பூஜைக்கு மிகவும் பிரசிதி பெற்ற மேற்கு வங்காளத்தில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அரசு சார்பில் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜை நிகழ்ச்சியில் முதல்மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கர் தனது அதிகாரிகளுடன் பங்கேற்றார். ஆனால் தனக்கு நிகழ்ச்சியை கண்டுகளிக்க வசிதியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டவில்லை என ஆளுநர் குற்றம் சாட்டினார். 

மேலும், இந்த அவமானம் எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்காள மக்களுக்கும் தான் என தெரிவித்தார். ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு மேற்குவங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்நிலையில், ஆளுநர் ஜகதீப் தங்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நானும் எனது மனைவியும் காளி பூஜை முடிவடைந்த இரண்டாவது நாள் கொண்டாடப்படும் பாய்பொடா நிகழ்ச்சியில் பங்குபெற உங்கள் வீட்டிற்கு வர விரும்புவதாக மம்தா பானர்ஜி கடிதம் எழுதினேன். 

அதற்கு மம்தா பானர்ஜி அவர்கள் நீங்கள் காளி பூஜையிலும் கலந்துகொள்ள எனது வீட்டிற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். ஆகையால் அவரது அழைப்பை ஏற்று நானும் எனது மனைவியும் இணைந்து மம்தா பானர்ஜி வீட்டில் நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ள காளி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளோம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.     

மேற்கு வங்காளத்தில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில் ஆளுநர் ஜகதீப் தங்கர் முதல்மந்திரி மம்தா பானர்ஜி வீட்டில் நடைபெறும் காளிபூஜையில் பங்கேற்றக உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
Tags:    

Similar News