செய்திகள்
ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

Published On 2019-10-22 05:26 GMT   |   Update On 2019-10-22 07:54 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.

ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாலும் சாட்சிகளை அவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலைக்கலாம் என்று கருதப்படுவதாலும் ஜாமீன் வழங்க இயலாது என்று தெரிவித்தது.

இதையடுத்து டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனு செய்தார்.

டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்சில் நடைபெற்றது. ப.சிதம்பரம் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார். ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.

சிதம்பரம் விடுதலை செய்யப்பட்டால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்க மாட்டார் என்றும் உறுதி அளித்தார். ஆனால் சிதம்பரத்தை வெளியில் விடக்கூடாது என்று அரசு வக்கீல் தஸ்கர்மேத்தா வாதாடினார். வக்கீல்களின் வாதம் கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்தனர். ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் பண பரிமாற்றத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

தற்போது அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 90 சதவீத விசாரணையை முடித்து விட்டனர். நாளை, நாளை மறுநாள் வரை ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை நீடிக்க உள்ளது.

24-ந்தேதி அமலாக்கத்துறை விசாரணை முடிந்ததும் அவர் மீண்டும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.



இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் பானுமதி, போப் பண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் உத்தரவிட்டனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவரை வேறு எந்த வழக்கு விசாரணைக்கும் தேவை இல்லாவிட்டால் உடனே சிறையில் இருந்து விடுதலை செய்யலாம்.

ப.சிதம்பரம் ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தி ஜாமீன் பெற வேண்டும். அந்த தொகைக்கு இணையான பிணை தொகையை மேலும் 2 பேர் கோர்ட்டில் வழங்க வேண்டும். ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் கோர்ட்டு அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அவர் தனது பாஸ்போர்ட்டை டெல்லி சிறப்பு நீதிமன்றத்திடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்காக அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

விசாரணை குழுவினர் எப்போது அழைத்தாலும் அவர் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ப.சிதம்பரத்திற்கு சரியாக 2 மாதத்திற்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது. அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து இருப்பது அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

அமலாக்கத்துறையினர் தற்போது சிதம்பரத்தை தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். எனவே அவரால் உடனடியாக விடுதலையாக முடியாது. நாளை மறுநாள் (24-ந்தேதி) விசாரணை முடிந்ததும் ப.சிதம்பரம் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். அதன் பிறகு அவர் மீண்டும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்படுவார்.

அமலாக்கத்துறை 6 பிரிவுகளில் ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் அவர் ஜாமீன் பெற்ற பிறகே திகார் ஜெயிலில் இருந்து விடுதலை ஆவார். இதனால் ப.சிதம்பரம் முழுமையாக விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை முதற்கட்ட குற்றப்பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். நேற்று அந்த குற்றப்பத்திரிகையை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

அந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை வருகிற 24-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ப.சிதம்பரத்துக்கு மட்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் உள்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற 13 பேரும் 29-ந்தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கோர்ட்டு விசாரணை தீவிரமாகி உள்ளது.

சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்க இந்திராணி முகர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் மூலம் ரூ.35 கோடி கைமாறி உள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசுக்கு அவர் வருவாய் இழப்பு ஏற்படுத்தி விட்டதாக குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரம் சிறப்பு கோர்ட்டில் மறுத்து நிரூபிப்பதன் மூலம் மட்டுமே அவரால் ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.
Tags:    

Similar News