செய்திகள்
சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரஞ்சால் பாட்டீல், உதவி கலெக்டருடன் ஆலோசனை நடத்திய காட்சி.

விடாமுயற்சி செய்தால் விரும்பிய முன்னேற்றம் கிடைக்கும் - பார்வையற்ற பெண் சப்-கலெக்டர்

Published On 2019-10-15 05:17 GMT   |   Update On 2019-10-15 05:17 GMT
விடாமுயற்சி செய்தால் விரும்பிய முன்னேற்றத்தை பெறலாம் என்று பார்வையற்ற பெண் சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரளாவின் திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஞ்சால் பாட்டீல், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் திருவனந்தபுரம் சப்-கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பதவியேற்க வந்த பிரஞ்சால் பாட்டீலுக்கு கலெக்டர் கோபாலகிருஷ்ணன் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

உதவி கலெக்டர் அனுக்குமாரி அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் அலுவலக ஊழியர்கள் அவருக்கு இனிப்பு வழங்கி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல் பார்வையற்றவர் என்பதால், அவர் அலுவலக கோப்புகளை பார்க்க தனி உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கோப்புகளில் உள்ள விபரங்களை படித்து காண்பிப்பார். அவற்றை முழுமையாக கேட்ட பின்பு, சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல் கோப்புகளில் கையெழுத்து இடலாம் என்று கலெக்டர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


அதன்படி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஐ.ஜி. அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய கடிதம் ஒன்றை பிரஞ்சால் பாட்டீல் கையெழுத்திட்டு அனுப்பினார்.

முதல் நாள் பணிகள் குறித்து, சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் விரும்பிய முன்னேற்றத்தை பெறலாம். ஒருபோதும் நாம் வீழ்த்தப்பட கூடாது. விட்டு தரவும் கூடாது.

தொடர் முயற்சி வெற்றியை ஈட்டிதரும். அதை நோக்கி நாம் பயணப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவனந்தபுரம் சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரஞ்சால் பாட்டீல் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 6 வயதில் இவருக்கு கண்பார்வை பறிபோனது. அதன் பிறகு விடாமுயற்சியுடன் படிப்பில் கவனம் செலுத்தினார். மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை படித்த பிரஞ்சால் பாட்டீல், முதுகலைப்படிப்பை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக கல்லூரியில் முடித்தார்.

2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இதில் அகில இந்திய அளவில் 773-வது இடம் பிடித்தார். இதனால் அவருக்கு இந்திய ரெயில்வேயில், அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணி ஒதுக்கப்பட்டது.

பார்வையற்றவர் என்பதால் அந்த பணியை ஏற்க மறுத்து மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். 2017-ம் ஆண்டு எழுதிய தேர்வில் இவர் அகில இந்திய அளவில் 124-வது ரேங்க் எடுத்தார்.

கேரள கேடரில் எர்ணாகுளத்தில் பயிற்சி கலெக்டராக பணியில் சேர்ந்தார். நேற்று திருவனந்தபுரம் சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரஞ்சால் பாட்டீலின் கணவர் ஒரு விவசாயி ஆவார்.

Tags:    

Similar News