செய்திகள்
இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்

சந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் - இஸ்ரோ வெளியிட்டது

Published On 2019-10-05 11:50 GMT   |   Update On 2019-10-05 11:50 GMT
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
பெங்களூரு:

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 என்ற விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது.

அந்த விண்கலம் நிலவில் ஆய்வு செய்து அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. மேலும் ஹீலியம்-3 ரக வாயு இருப்பதையும் உறுதி செய்தது. இதற்கான பட ஆதாரங்களையும் சந்திரயான்-1 அனுப்பியது. இதன் மூலம் நிலவின் முதல் கட்ட ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, நிலாவில் அடுத்தகட்ட ஆய்வு பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்காக சுமார் ரூ.1000 கோடி செலவில் 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் தயாரிக்கப்பட் டது.

இந்த விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. இந்த 3 பகுதிகளிலும் அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை சுமந்து கொண்டு சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணுக்கு புறப்பட்டது.

கடந்த மாதத்தின் தொடக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி தனியாக பிரிந்தது. இந்த லேண்டர் கருவிதான் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது.

லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் மூலம் 15 நாட்கள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டரை தரை இறக்கும் முயற்சி கடந்த மாதம் 7-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது.

நிலவின் தென் துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை தரை இறக்கியது இல்லை. எனவே லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் கடந்த 7-ந்தேதி லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது.



இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது.

இதற்கிடையே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். நிலவை சுற்றிவரும் தங்களது விண்கலம் மூலம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

லேண்டர் திசைமாறி சென்று விழுந்து விட்டதாக கருதப்படும் பகுதியில் உயர்சக்தி கொண்ட கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டது. என்றாலும் லேண்டர் எந்த பகுதியில் விழுந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை

சந்திரயான்2 விண்கலத்தில் உள்ள ஆர்பிட்டர் என்பது நிலவின் சுற்றுப்பாதையில் வட்டமிடும் கருவியாகும்.இந்த ஆர்பிட்டரில் நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera )
ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera ) ஆகிய இரண்டு கேமராக்கள் உள்ளன.

நிலவின் மேற்பரப்பை 3-டி படங்களாய் தயாரிக்க நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera ) பொருத்தப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கு வேண்டிய படங்களை தயாரிக்க ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera ) பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், சில முக்கிய புகைப்படங்களை எடுத்து இஸ்ரோ மையத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில்  இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா மூலம் 5-9-2019 அன்று மாலை 4.38 மணியளவில் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியை இந்த படங்கள் காட்டுவதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News