செய்திகள்
கொள்ளை நடந்த ஏடிஎம் மையம்

ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்

Published On 2019-09-28 10:44 GMT   |   Update On 2019-09-28 10:44 GMT
மத்திய பிரதேசத்தில் ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம், அமர்படான் நகரில் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் சிலர் காரில் வந்துள்ளனர். பணம் எடுப்பதுபோன்று உள்ளே சென்ற அந்த நபர்கள், உள்ளே சென்றதும் அங்கிருந்த சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து லென்சை மறைத்துள்ளனர்.

பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அதை உடைக்க முடியவில்லை. எனவே, இயந்திரத்தை பெயர்த்து எடுத்து, அவர்கள் வந்த வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.29.55 லட்சம் பணம் இருந்துள்ளது.

ஏடிஎம் மையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு கடையின் காவலாளி, சந்தேகப்பட்டு கடை உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். அதிகாலை 1.47 மணியில் இருந்து 2.08 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

ஏடிஎம் மையத்தில் உள்ள கேமரா சேதமடைந்ததால், அதில் கொள்ளையர்கள் குறித்த எந்த பதிவும் இல்லை. எனவே, அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்னா மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் செல்வது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News