செய்திகள்
வழக்குப்பதிவு

15 வயது மகளை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய் மீது வழக்குப்பதிவு

Published On 2019-09-16 08:09 GMT   |   Update On 2019-09-16 08:09 GMT
டெல்லியில் 15 வயதான மகளை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புது டெல்லி:

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 15 வயது மகளை பதார்பூரில் உள்ள அவரது சித்தியின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால், அங்கு செல்வதற்கு பதிலாக நிசாமுதீன் பகுதியில் ஒரு ஓட்டலுக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், ‘உன்னை ஒருவர் அழைத்துச் செல்வார். பின்னர் அவரே உன்னை வீட்டிற்கு திரும்ப கொண்டு வந்து விட்டுவிடுவார்’ என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமி, தாயுடன் சென்றுள்ளார்.

அவர் அழைத்துச் சென்ற இடத்தில் சில பெண்கள்  நகைகள், திருமண உடை ஆகியவற்றைக் கொடுத்து தயாராகும்படி கூறியுள்ளனர். பின்னர் அச்சிறுமியிடம்,  ‘உன்னை ரூ.1 லட்சம் கொடுத்து உன் தாயிடம் இருந்து வாங்கிவிட்டோம்’ என கூறியுள்ளனர்.

இதையடுத்து அச்சமடைந்த சிறுமி எப்படியோ தப்பித்துவிட்டார். பினர் அச்சிறுமி சொந்த ஊரான பவானாவுக்குச் சென்றுள்ளார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் நடந்ததை கூறவே, அவர்கள் டெல்லி பெண்கள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த சிறுமி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த புகாரை விசாரித்த போலீசார், தாய் சிறுமியை விற்றதை உறுதி செய்தனர். மேலும் ஒரு வயதான அவரது மகனையும் விற்றது தெரிய வந்துள்ளது.

அதன்பின்னர் அவர்மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 15 வயது சிறுமி  காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News