செய்திகள்
ஓஎன்ஜிசி தீ விபத்து

நவி மும்பையில் ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து- 5 பேர் பலி

Published On 2019-09-03 04:51 GMT   |   Update On 2019-09-03 06:51 GMT
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 ஊழியர்கள் பலியாகினர்.
மும்பை:

இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்தான் மிகப்பெரிய நிறுவனமாகும்.

இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தேவையில் 70 சதவீதத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனமே பூர்த்தி செய்கிறது.

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் நவி மும்பை பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி, சுத்திகரிப்பு ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இன்று காலை 6.45 மணிக்கு அந்த ஓ.என்.ஜி.சி. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கழிவு தண்ணீரை வெளியேற்றும் பகுதியில் முதலில் தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த ஆலை முழுவதும் தீ பரவியது.

தீ பரவியபோது ஊழியர்களில் ஒரு பகுதியினர் பணி முடிந்து சென்று கொண்டிருந்தனர். அடுத்தக்கட்ட பணிக்கான ஊழியர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் தீ நடுவே சிக்கிக்கொண்டனர்.


அந்த ஊழியர்களில் 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மும்பை புறநகர் பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சில மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

தீ கட்டுக்குள் வந்ததும் உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கின. தீ விபத்தில் 11 பேர் காயங்களுடன் தப்பினார்கள். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதும் மேலும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடகூடாது என்பதற்காக சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு ஆட்களை உள்ளே விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதோடு தீ எப்படி பிடித்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டு இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு தற்போது அங்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News