செய்திகள்
வங்கி பணம் மோசடி

ஐகோர்ட்டு நீதிபதியின் வங்கி பணம் ரூ.1 லட்சம் நூதன முறையில் ‘அபேஸ்’

Published On 2019-08-31 21:22 GMT   |   Update On 2019-08-31 21:22 GMT
ஐகோர்ட்டு நீதிபதியின் வங்கி பணம் ரூ.1 லட்சம் நூதன முறையில் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் ஐகோர்ட்டு நீதிபதியாக இருப்பவர், அரிந்தம் லோத். கடந்த 26-ந் தேதி அவரது செல்போனிற்கு 5 முறை ரூ.20 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல்கள் வந்தன. ‘ஏ.டி.எம் கார்டு நம்மிடம் இருக்கிறது. பின்னர் எப்படி பணம் எடுக்க முடியும்?’ என்ற அதிர்ச்சி நீதிபதிக்கு ஏற்பட்டது. யாரோ முறைகேடு செய்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அவர், இதுகுறித்து உடனே போலீசிற்கு தெரிவித்தார்.

இந்த புகாரை முதலில் மேற்கு அகர்தலா போலீஸ் நிலைய அதிகாரி டி.பி.ராய் விசாரித்தார். இச்சம்பவம் இணையதள மோசடி தொடர்பானது என்பதால், புகாரை திரிபுரா சைபர் கிரைம் போலீசாரிடம் கூடுதல் விசாரணைக்காக மாற்றினார். ‘விசாரணை நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த புகார் முடிவுக்கு வரும்’ என்று டி.பி.ராய் தெரிவித்துள்ளார்.

போலீஸ் தரப்பில் இதுபற்றி கூறுகையில், ‘இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளர்களின் தகவல் பரிமாற்றங்களை முறையான பாதுகாப்பில்லாத வங்கி தளத்திலிருந்து திருடுகின்றனர். இதுபோன்று பல மோசடி புகார்கள் வந்தும் சம்பந்தபட்ட வங்கிகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்காததால், குற்றவாளிகள் பிடிபடுவதில்லை. வங்கி விதிமுறைகளின்படி எல்லா ஏ.டி.எம்.களிலும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை நியமித்து பணம் எடுக்க வருபவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். ஆனால் எந்தவொரு வங்கியும் இந்த விதியினை பின்பற்றுவது இல்லை. இதனால் குற்றவாளிகள் எளிதில் மோசடியில் ஈடுபடுகின்றனர்’ என்றனர்.
Tags:    

Similar News