செய்திகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - அனிதா போஸ்

நேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்

Published On 2019-08-22 10:25 GMT   |   Update On 2019-08-22 10:25 GMT
ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம், நேதாஜியின் மகள் அனிதா போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
புது டெல்லி:

மகாத்மா காந்திக்கு இணையான தேச தலைவராக போற்றப்படுபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வெளிநாட்டில் இருந்தபடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

அப்படிப்பட்ட தேச தியாகிகளுள் ஒருவரான நேதாஜி, கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாகவும், அவர் உடல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், நேதாஜி மரணம் அடையவில்லை என்று அவருடைய சகோதரரும், குடும்பத்தினரும் கூறினார்கள். அவர் தலைமறைவாக இருப்பதற்காக இறந்து விட்டதாக செய்தி பரப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

இது சம்பந்தமாக பல விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனாலும் நேதாஜி விமான விபத்தில் இறந்தாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ரெங்கோஜி கோவிலில் உள்ள சாம்பலை எடுத்து செல்லும்படி இந்தியாவிடம் ஜப்பான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனாலும், அவரது மரணம் உறுதி செய்யப்படாததால் அதை ஏற்று கொள்ளவில்லை.



இது குறித்து நேதாஜியின் மகளான அனிதா போஸ் கூறுகையில், ‘ஜப்பானில் உள்ளதாக கூறப்படும் நேதாஜியின் சாம்பலை எடுத்து அதை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக இந்திய அரசும், ஜப்பான் அரசும் உரிய முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் நேதாஜி மரணத்தின் மர்மம் விலகி விடும்.

மேலும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறவும் விரும்புகிறேன். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் நேதாஜியின் மரணம் தொடர்பான ஆவணங்களை வகைப்படுத்தி வெளியிட்டார். ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பல் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார்.

ஆனால், மத்தியில் ஆண்ட முந்தைய அரசுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. முந்தைய அரசுகள் கோப்புகளை வகைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்படும் என கூறி வந்தனர்.

அப்படி இல்லாமல், முறையான ஆவணங்களை வகைப்படுத்தி இருந்தால் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இன்றளவும் எழாமல் இருந்திருக்கும். எனவே, நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ பரிசோதனைக்கு விரைவில் உட்படுத்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கிறேன்’ என கூறியுள்ளார்.
Tags:    

Similar News