செய்திகள்
கண்புரை அறுவை சிகிச்சை

மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோனது

Published On 2019-08-18 08:13 GMT   |   Update On 2019-08-18 09:24 GMT
மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர்:

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கண் மருத்துவமனையில் ‘தேசிய பார்வையின்மை தடுப்பு திட்டம்’ என்ற நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் 14 பேருக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை (கேட்டராக்ட்) செய்யப்பட்டது. கடந்த 7-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதற்கு மறுநாளே 14 பேரில் 11 பேர் தங்களது கண் பார்வையினை இழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்தூர் தலைமை மருத்துவர் மற்றும் சுகாதார அலுவலர் பிரவீண் ஜாடியா கூறியதாவது:-

இந்தூரில் உள்ள  மருத்துவ மனையில் கடந்த 8-ந்தேதி பார்வை குறைபாட்டை போக்குவதற்காக அரசு திட்டத்தின் கீழ் 13 பேர் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவர்களில் 11 பேருக்கு பார்வை மங்கலாக தெரிகிறது.

பாக்டீரியா தொற்று காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் 45 முதல் 85 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஒரு மாதத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டில் இதே மருத்துவமனையில் 18 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட போது இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. தற்போது பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு மற்றொரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 


இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்துமாறு முதல்-மந்திரி கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

11 பேர் கண் பார்வை இழந்ததாக அஞ்சப்படும் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஏற்கனவே இதுபோன்ற தவறை செய்துள்ள நிலையில் மீண்டும் அந்த மருத்துவமனை இயங்க எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? என்று விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணைக்கு பிறகு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீதும், மருத்துவமனை நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதிஉதவியும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News