செய்திகள்
கட்டப்பிரபா ஆற்றின் கரையோரத்தில் உள்ள விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை படத்தில் காணலாம்.

வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகம்- 10 பேர் பலி

Published On 2019-08-09 01:41 GMT   |   Update On 2019-08-09 01:41 GMT
இடைவிடாது கொட்டி வரும் கனமழை காரணமாக வடகர்நாடகம் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த மழை வெள்ளத்துக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மீட்பு பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. தொடக்கத்தில் மாநிலத்தில் மழை பெய்யாமல் இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், தென் கர்நாடகத்தில் உள் மாவட்டங்களான சிவமொக்கா, கார்வார், மங்களூரு, உடுப்பி, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டி வருவதால் கபினி அணை நிரம்பி வழிகிறது. அந்த அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் 85 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர் வெளியேற்றமும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கபிலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எச்.டி.கோட்டை, டி.நரசிப்புரா, நஞ்சன்கூடு ஆகிய 3 தாலுகாக்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் உள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள ஆசாத் நகர் வெள்ளத்தில் மிதக்கிறது. ஹாசன் அருகே பல இடங்களில் தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் வருகிற 16-ந்தேதி வரை மங்களூரு-பெங்களூரு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் படுகையில் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வட கர்நாடகத்தில் பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் வினாடிக்கு சுமார் 5 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அந்த நீர் கிருஷ்ணா ஆற்றில் அபாய மட்டத்தை மீறி கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நாராயணபுரா, அலமட்டி அணையும் நிரம்பி விட்டதால் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு சுமார் 8 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட வருகிறது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் படுகையில் அமைந்துள்ள பெலகாவி, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெலகாவி மாவட்டம் கோகாக் நகரம் தண்ணீரில் மிதக்கிறது. அந்த மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில மற்றும் தேசிய பேரிடர் குழு மற்றும் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் படகுகளில் பத்திரமாக மீட்டு வந்து முகாம்களில் தங்க வைத்தனர். மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கர்நாடகத்தில் இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 43 ஆயிரத்து 858 பேர் கூட்டு மீட்பு குழுக்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தர கன்னடா மாவட்டத்தில் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். அந்த மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 88 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிவமொக்காவில் துங்கா ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒசநகர் தாலுகா கவட்டூர் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து முகமது அலி (54) என்பவர் உயிரிழந்தார். உப்பள்ளியில் பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சென்னம்மா பாலிகார்(வயது 45) என்ற பெண் இறந்தார். கட்டப்பிரபா ஆற்றில் தண்ணீர் அடித்து செல்லப்பட்ட 10 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

யாதகிரி மாவட்டத்தில் உள்ள பீமா ஆற்றில் சந்திரப்பா(34) என்பவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. அதே போல் உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகாவில் உள்ள சேர்காடியா பெனகல் கிராமத்தை சேர்ந்த கங்கா மரகால்தி(52) என்ற பெண் மாட்டு கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்து பலியானார்.

அரசு அதிகாரிகள் அளித்த தகவலின்படி நேற்று வரை மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் மாநிலத்தில் சார்மடி, சிராடி உள்ளிட்ட முக்கிய சாலைகள் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மழை வெள்ளத்தில் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. மரங்கள் சாய்ந்து விழுந்ததில் ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நேற்று வரை 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் அதிகளவில் வெள்ளம் வந்தால் பாதிக்கப்படும் கிராமங்களை கண்டறிந்து அங்குள்ள மக்களை வெளியேற்ற தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெலகாவியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். சிவாஜிநகர் மற்றும் காந்திநகர் பகுதியில் அவர் நேரில் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை அவர் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் அவர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த மழைக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மழை வெள்ள மீட்பு பணிக்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் வந்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் மூலம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தமாக 220 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வசதிக்காக 186 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் உணவு, உடை, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசு ஒரு மனு கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் உதவிகள் செய்யப்படும். மாநில அரசு இதுவரை என்னிடம் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புவது, ஹெலிகாப்டரை அனுப்புவது போன்ற அனைத்து உதவிகளும் செய்யப்படும். வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படி பிரதமர் மோடி எனக்கு உத்தரவிட்டார்“ என்றார்.

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகர்நாடகத்தில் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். வட கர்நாடகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக பெலகாவியில் 2 நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், தலைநகர் பெங்களூருவில் மட்டும் நேற்று முன்தினம் வரை மழை பெய்யவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக தூறல் மட்டுமே தூறியது. இதனால் நகரவாசிகள் ஏமாற்றம் அடைந்திருந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று மதியம் 3.30 மணியவில் சிறிது கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Tags:    

Similar News