செய்திகள்
மாதிரி படம்

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை மீண்டும் மாற்றம்

Published On 2019-07-26 11:01 GMT   |   Update On 2019-07-26 11:01 GMT
சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை மீண்டும் மாற்றும் பணி நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வெற்றிக்கரமாக முடிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

புதுடெல்லி:

நிலவில் தண்ணீர் எந்த அளவிற்கு உள்ளது. அங்கு மனிதர்கள் குடியேற எந்த அளவிற்கு வாய்ப்பு உள்ளது. நிலவில் வேறு என்னென்ன பொருட்கள் உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய கடந்த 2008-ம் சந்திரயான்-1 விண்கலம் ஏவப்பட்டது.

அந்த விண்கலம் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து சந்திரயான்-2 என்ற விண்கலம் ரூ.1000 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 22-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்111 என்ற ராக்கெட் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட 16 நிமிடம் சந்திரயான்-2 தனியாக பிரிந்தது. புவி வட்ட சுற்றுப் பாதையில் அது வெற்றிக்கரமாக பறக்கவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் சந்திரயான்- 2-வின் புவி சுற்று வட்ட பாதையை மாற்றும் முதல் கட்டப்பணி நடைபெற்றது. அதாவது குறைந்தபட்சம் 230 கி.மீட்டர் தூரமும், அதிகபட்சமாக 45 ஆயிரத்து 163 கி.மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டது.

சந்திரயான் விண்கலத்தில் உள்ள உந்து திசை மூலம் இந்த சுற்றுப்பாதை மாற்றம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சந்திரயான்- 2-வின் புவி வட்ட சுற்றுப் பாதையை மேலும் மாற்றி அமைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சந்திரயான் விண்கலத்தின் புவி வட்டப் பாதையை மாற்றும் பணி நடைபெற்றது. குறைந்த பட்சம் 251 கி.மீட்டர் தூரமும், அதிகபட்சம் 54 ஆயிரத்து 829 கி.மீட்டர் தூரமும் கொண்ட புவி வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.

இந்த பணி வெற்றிக்கரமாக முடிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

அடுத்து வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் சந்திரயான்-2 விண்கலத்தின் புவி வட்ட சுற்றுப்பாதை மாற்றப்படும். மொத்தம் 5 தடவை இப்படி சந்திரயானின் சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உயர்த்தப்படும்.

இறுதியில் அதிகபட்சமாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 505 கி.மீட்டர் தூரத்தில் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படும். அதன் பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும்.

ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி நிலவில் சுற்றுப்பாதையை சந்திரயான்-2 விண்கலம் சென்றடையும். அதன்பிறகு நிலவில் சந்திரயான்-2 தரை இறக்குவதற்கான முதல் கட்டப்பணிகள் தொடங்கும்.

சுற்றுப்பாதையில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டு நிலவின் தெற்கு பகுதியில் சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் நிலவில் சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கிவிடும்.

நிலவில் தரை இறங்கும் 15 நிமிடங்கள் மிக முக்கியமான நேரமாகும். எனவே அந்த நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்ய இப்போதே இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.

Tags:    

Similar News