செய்திகள்
ஜஷீத்

இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை மீட்ட ஆந்திர போலீசார்

Published On 2019-07-25 10:08 GMT   |   Update On 2019-07-25 10:08 GMT
ஆந்திர மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 வயது குழந்தையை அம்மாநில போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அமராவதி:

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் அருகே ஜஷீத்(4) விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டான்.

இதையடுத்து அங்கிருந்த பாட்டி, அலற ஆரம்பித்தார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பின்னர் 7 படைகளை அமைத்து தீவிரமாக தேட தொடங்கினர். சிறுவனை கடத்தியவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.



இப்படியே 2 நாட்கள் கடந்தன. பின்னர் ஆந்திராவில் குட்டுகுலுரு எனும் கிராமத்தில் உள்ள செங்கல் சூளைக்கு அருகே சிறுவன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் ஜஷீத்தை மீட்டனர்.

சிறுவனை விசாரித்தபோது, தன்னை கடத்தியவர்களுள் ஒருவர் பெயர் ராஜூ என்றும், எங்கு தங்கியிருந்தேன் என்பது பற்றி தெரியாது என்றும் கூறியுள்ளான். மேலும் 2 நாட்களாக வெறும் இட்லி மட்டுமே கொடுத்தனர் எனவும், அடிக்கவோ துன்புறுத்தவோ இல்லை எனவும் கூறியுள்ளான்.

இதன் அடிப்படையில் போலீசார் கடத்தல்காரர்களை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும்போது குழந்தை ஆர்பரித்து தாயை கட்டி அணைத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





Tags:    

Similar News