செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

இந்த தாக்குதலுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது

Published On 2019-07-23 09:06 GMT   |   Update On 2019-07-23 09:06 GMT
சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள தாக்குதல் வீடியோவிற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.



ஆந்திர பிரதேச மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து மைதானம் ஒன்றில் நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது கும்பல் கொலை என சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது.

53 வினாடிகள் ஓடும் வீடியோவில் நபர் ஒருவர் மயங்கிய நிலையில் தரையில் கிடப்பதும், அவரை பலர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வீடியோ காட்சிகள் கும்பல் கொலை சம்பவம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை ரிவர்ஸ் சர்ச் செய்ததில், இந்த சம்பவம் ஜூன் 28, 2019 இல் நடைபெற்றதாக ஆந்திர மாநிலத்தின் இடி.வி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் அனந்தபுரமு மாவட்டத்தின் அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடந்திருக்கிறது.

மேலும் இது கும்பல் கொலை கிடையாது என்றும், தாக்கப்பட்ட நபர் அந்த கல்லூரி மாணவர் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் தன் நண்பரை பார்க்க அடிக்கடி அங்கு வந்து சென்றிருக்கிறார். இவ்வாறு வந்து சென்றதில் கல்லூரி மாணவி மீது அந்த நபருக்கு காதல் ஏற்பட்டது.



தன் காதலை மாணவியிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். காதலை ஏற்க மறுத்த மாணவி தன் நண்பரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார். மாணவியின் நண்பர் தன் நண்பர்களோடு சேர்ந்து சம்மந்தப்பட்டவரை கொடூரமாக தாக்கினார். இவருடன் அவரின் நண்பர்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திய வீடியோ தான் தற்சமயம் வைரலாகியுள்ளது. 

தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக அனந்தபரமு காவல் துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் தாக்கப்பட்ட நபர் மரணிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் இந்த தாக்குதலானது கும்பல் கொலை என சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவுகளில் எந்த உண்மையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பெருமளவு இழப்பை சந்தித்து இருக்கின்றனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். 

சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News