செய்திகள்
எண்ணெய்க் கப்பல்

சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்கள் நலமுடன் உள்ளனர்- ஈரான் தூதரகம் தகவல்

Published On 2019-07-23 04:33 GMT   |   Update On 2019-07-23 04:41 GMT
சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 19-ம் தேதி சென்று கொண்டிருந்த பிரிட்டன் எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. 

சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் 18 இந்தியர்கள் உள்ளிட்ட 23 பணியாளர்கள் உள்ளனர். கப்பலில் இந்தியர்கள் சிறைப்பிடிக்கப்பட்டது தொடர்பான செய்திகளை தொலைக்காட்சி வாயிலாக அறிந்த உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்திய தூதரகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு தவித்துவரும் 18 இந்தியர்களையும் மீட்கும் பணிகளை இந்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. 



இந்நிலையில் ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.  ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ’ஸ்டேனா இம்பெரோ’ கப்பல் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தது. பிரிட்டனில் உள்ள எண்ணைய் நிறுவனத்துக்காக சரக்கு ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஈரானின் நடவடிக்கைக்கு எப்படி பதிலடி கொடுப்பது? என்பது குறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே தலைமையில் அவசர பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு, பிரச்சினைக்குரிய பகுதிகளில் எண்ணெய்க் கப்பலை பாதுகாப்பாக கொண்டு செல்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
Tags:    

Similar News