செய்திகள்
மக்களவை

ஷீலா தீட்சித், ராம் சந்திர பஸ்வான் மறைவுக்கு மக்களவையில் இரங்கல்

Published On 2019-07-22 06:52 GMT   |   Update On 2019-07-22 06:52 GMT
மக்களவை உறுப்பினர் ராம் சந்திர பஸ்வான் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரின் மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லி முன்னாள் முதல்வரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஷீலா  தீட்சித் கடந்த சனிக்கிழமை காலமானார். இதேபோல் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரரும் சமஸ்திபூர் எம்.பி.யுமான ராம் சந்திர பஸ்வான் நேற்று மரணம் அடைந்தார். 

இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பாராளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது, ஷீலா தீட்சித் மற்றும் ராம் சந்திர பஸ்வான் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்பை வாசித்தார். இருவரின் மறைவுக்கும் மக்களவை ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார். அப்போது,உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராம் சந்திர பஸ்வான், நான்காவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஷீலா தீட்சித் 1984 முதல் 1989 வரை டெல்லி கன்னாஜ் பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக பணியாற்றினார். டெல்லி சட்டசபைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக பதவி வகித்தார். அதன்பின்னர் கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News