செய்திகள்
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்

கர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க தவறினார் குமாரசாமி

Published On 2019-07-19 09:41 GMT   |   Update On 2019-07-19 09:41 GMT
கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் விதித்த கெடு நேரம் முடிந்தும் வாக்கெடுப்பு நடைபெறாததால் அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் இன்னும் தீரவில்லை.
பெங்களூரு:

கர்நாடக அரசியலில் தொடரும் பரபரப்பாக, இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்து பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்திருந்தார்.

ஆனால், ஒரு மாநிலத்தின் கவர்னர் சட்டசபையின் மத்தியஸ்தராக இயங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் முன்னர் அளித்த ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டிய ஆளும்கட்சியினர், இப்படி ஒரு உத்தரவையும் கெடுவையும் விதிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

நான் கவர்னரை பற்றி ஏதும் விமர்சிக்க மாட்டேன். ஆனால்,  கவர்னர் இப்படி கெடு விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதா? என சபாநாயகர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று முதல் மந்திரி குமாரசாமி குறிப்பிட்டார்.

இதனால், பிற்பகல் 2 மணிக்கு மேலாகியும் சட்டசபையில் அரசின் மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெறாததால் அம்மாநில அரசியல் நிலவரம் திரிசங்கு நிலையில் தேங்கி நிற்கின்றது.

இதற்கிடையில், ஆட்சியின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதித்தனர். 



இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சித்தராமையா, இன்னும் 20 உறுப்பினர்கள் இந்த விவாதத்தின்மீது பேச வேண்டியுள்ளதால் இன்றுடன் விவாதம் முடியும் என்று நான் கருதவில்லை. திங்கட்கிழமை வரை விவாதம் தொடரலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

இதற்கிடையில், சட்டசபையை 3 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
Tags:    

Similar News