செய்திகள்
வெள்ளத்தை பார்வையிடும் கிராமத்தினர்

பீகார் - மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு

Published On 2019-07-17 16:52 GMT   |   Update On 2019-07-17 16:52 GMT
பீகாரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின. இங்கு வசிக்கும் சுமார் 25 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

ஓயாது பெய்த மழையால் பீகாரில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளநீர் அபாயக்கட்டத்தை கடந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் மக்கள் குடியிருக்கும் பகுதிகளையும் சூழ்ந்ததால் பல ஊர்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்புக்குழுவினர் ஆகியோர் ராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
முதல் மந்திரி நிதிஷ் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News