செய்திகள்
அசாமில் வெள்ளப்பெருக்கு

அசாம், பீகாரில் வெள்ளப்பெருக்கு- மத்திய அரசை குறை கூறிய காங்கிரஸ் எம்.பி.க்கள்

Published On 2019-07-17 10:09 GMT   |   Update On 2019-07-17 10:09 GMT
அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசை காங்கிரஸ் எம்பிக்கள் குறை கூறினர்.
புதுடெல்லி:

வட மாநிலங்களில் தற்போது பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அசாம், பீகார் மாநிலங்களில் அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவையில் இதுபற்றி காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசும்போது, அசாம் வெள்ளப்பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்தார். மேலும், அசாமில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 43 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் கூறினார். 

மற்றொரு காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத் பேசும்போது, பீகாரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று குறை கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல், எலிக்கறி சாப்பிடுவதாகவும் தெரிவித்தார்.



அதன்பின்னர் பேசிய பாஜக எம்பி ராம்கிரிபால் யாதவ், காங்கிரஸ் எம்பிக்களின் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் தவறான தகவல்களை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பீகார் மாநிலத்திற்கு மத்திய அரசு 261 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரணங்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News