செய்திகள்
சஸ்பெண்டு (கோப்பு படம்)

கேரளாவில் ஆசிரியரை லத்தியால் தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2019-07-10 18:29 GMT   |   Update On 2019-07-10 18:29 GMT
கேரளாவில் ஆசிரியரை லத்தியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் சமீபகாலமாக போலீசார் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொள்வதாக ஏராளமான புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளது.

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற நிதிநிறுவன அதிபர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரை போலீசார் லாக்கப்பில் வைத்து தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்த புகாரில் போலீஸ் அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆசிரியர் ஒருவரை மனிதாபிமானம் இல்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் லத்தியால் தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர் பெயர் விஜயகுமார். திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்த இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார்.

சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் ஆசிரியர் விஜயகுமார் தனது வீட்டிற்கு செல்வதற்காக கிளிமானூர் சந்திப்பில் ஆட்டோவுக்காக காத்துநின்றார். அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் அருண் அவரிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் தன் கையில் இருந்த லத்தியால் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

ஆசிரியர் விஜயகுமாரை சப்-இன்ஸ்பெக்டர் அருண் லத்தியால் தாக்குவதை சிலர் செல்போனில் படம்பிடித்து அதை சமூகவலைதளங்களில் பரவவிட்டனர். அதன்பிறகே இதுபற்றி வெளியே தெரிய வந்தது. இந்த தாக்குதல் பற்றி புறநகர் போலீஸ் சூப்பிரண்டு மது கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து அவர் அதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆற்றிங்கல் டி.எஸ்.பி. விசாரணை நடத்தியதில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் லத்தியால் ஆசிரியரை தாக்கியது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அருண் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
Tags:    

Similar News