செய்திகள்
இந்திராணி முகர்ஜி

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனார்

Published On 2019-07-05 00:44 GMT   |   Update On 2019-07-05 00:44 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனார். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
புதுடெல்லி:

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு, மத்திய நிதி மந்திரி பதவி வகித்தார்.

அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத்தந்தார்; இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார்; இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்ட விரோத பண பரிமாற்ற பிரச்சினையில், அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம், தற்போது ஜாமீனில் உள்ளார்.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு, டெல்லி ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியான இந்திராணி முகர்ஜி, தனது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் இதே வழக்கில் சிறையில் உள்ளார். இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தான் அப்ரூவராக மாற விரும்புவதாக இந்திராணி முகர்ஜி, டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் தெரிவித்தார். தானாக முன்வந்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறி உள்ளார்.

இதையொட்டி சி.பி.ஐ. பதில் அளிக்க நீதிபதி அருண் பரத்வாஜ் நோட்டீஸ் பிறப்பித்தார்.

இந்திராணி முகர்ஜி தனிப்பட்ட முறையில் நடத்திய அந்தரங்க உரையாடல்கள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும்; வழக்கை ஒருங்கிணைக்க உதவும் என சி.பி.ஐ. பதில் அளித்தது.

இந்த நிலையில், இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதற்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி அருண் பரத்வாஜ் நேற்று அனுமதி அளித்தார். இதனால் அவர் அப்ரூவர் ஆனார். இது அரசு தரப்பு வழக்குக்கு பலம் சேர்க்கும்.

இந்த வழக்கில், உரிய ஆவணங்களுடன் இந்திராணி முகர்ஜியை 11-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News