செய்திகள்

‘டிக்-டாக்’கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் முதுகெலும்பு முறிந்தது

Published On 2019-06-19 00:36 GMT   |   Update On 2019-06-19 00:36 GMT
துமகூரு அருகே ‘டிக்-டாக்’கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் முதுகெலும்பு முறிந்தது.
துமகூரு:

‘டிக்-டாக்’ இன்று மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த ெசயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் சாகசங்கள் செய்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறு சாகசகங்கள் செய்வது சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடுகிறது. அதுபோன்ற சம்பவம் தான் துமகூரு மாவட்டத்தில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா கோடேகெரே கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 26). இவர், ‘டிக்-டாக்’ செயலியில் பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும் வீடியோ பதிவிட்டு உள்ளார். இவர் சாகசம் செய்வது போன்ற வீடியோ பதிவிட முடிவு செய்தார். அதன்படி, அவர் தனது நண்பரின் உதவியுடன் சாகசத்தில் ஈடுபட முயற்சித்தார். அதாவது, சிறிது தொலைவில் இருந்து ஓடிவரும் குமார் தனது நண்பரின் உதவியுடன் தரையில் கைகள் படாமல் பின்புறமாக பல்டி அடிக்க முயற்சித்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக குமாரின் தலை தரையில் போய் இடித்தது. இதனால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டதோடு, முதுகெலும்பு முறிந்தது. இதனால் அவர் தரையிலேயே படுத்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட நண்பர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் குமார் ‘டிக்-டாக்கில்’ வீடியோ பதிவிட சாகசம் செய்து தலைகீழாக கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

Similar News