செய்திகள்

மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான 4 பேருக்கு ஜாமீன்

Published On 2019-06-14 09:14 GMT   |   Update On 2019-06-14 09:14 GMT
மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான 4 பேருக்கு ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை:

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் என்ற நகரில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புகளில் 37 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக 2013-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அபினவ் பாரத் அமைப்பு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து மனோகர் நவரியா, ராஜேந்திர சவுத்திரி, தன்சிங், லோகேஷ் சர்மா ஆகிய 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கைதான 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த 2008-ம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியாரும், தற்போதைய பா.ஜனதா எம்.பி.யுமான சாத்விபிரக்யா சிங் உள்பட சிலர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News