செய்திகள்

பஞ்சாப்- ஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

Published On 2019-06-11 05:07 GMT   |   Update On 2019-06-11 06:51 GMT
பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சங்ரூர்:

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், பகவான்புரம் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. துணியால் மூடப்பட்டு கிடந்த அந்த ஆழ்துளை கிணற்றின் மீது குழந்தை கால் வைத்தபோது உள்ளே விழுந்துவிட்டது. அருகில் நின்றிருந்த குழந்தையின் தாய் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 125 அடியில் குழந்தை சிக்கியிருந்தது. இதனால் குழந்தைக்கு முதலில் தேவையான ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

பின்னர் அந்த ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 110 மணி நேரம் கடுமையாக முயற்சி செய்து, இன்று காலையில் குழந்தையை மீட்டனர். அப்போது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததால், தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்தனர்.

குழந்தையை மீட்க காலதாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.



ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த செய்தி கேட்டு தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற கோரமான சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், திறந்தவெளி போர்வெல்கள் குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News