செய்திகள்

விடுமுறை எடுக்காதீர்கள் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Published On 2019-06-02 08:42 GMT   |   Update On 2019-06-02 08:42 GMT
வேலை நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

பிரதமராக நரேந்திரமோடி 2-வது முறையாக கடந்த 30-ந்தேதி பதவி ஏற்றார்.

அவரது அமைச்சரவையில் 57 மந்திரிகள் இடம் பெற்று உள்ளனர். 24 பேர் கேபினெட் மந்திரிகளாகவும், தனி பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக 9 பேரும், ராஜாங்க மந்திரிகளாக 24 பேரும் இடம் பெற்று உள்ளனர்.

புதிய மந்திரிகளுக்கு நேற்று முன்தினம் இலாகா ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மோடி தலைமையில் மத்திய மந்திரி சபையின் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட் டத்தில் விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன.



விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன் அறிமுகம் செய்யும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி மந்திரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். வேலை நாட்களில் விடுமுறை எடுக்கக்கூடாது, ஆடம்பரமான விழாக்களில் பங்கேற்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மோடி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மத்திய மந்திரிகள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும், தங்களது பணிகளை விடாமுயற்சியுடன் சிறப்பாக செய்ய வேண்டும்.

புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகளுக்கு வரவேற்பு விழாக்கள் நடத்தப்படும். இதில் ஆடம்பரம் வேண்டாம். பகட்டான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம்.

அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒரு சிறிய தவறு கூட நடைபெறாமல் இருக்க மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மத்திய மந்திரிகளுக்கு மோடி அறிவுறுத்தி உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



Tags:    

Similar News