செய்திகள்

டெல்லியில் பள்ளித் தோழியின் பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த மாணவி பலி

Published On 2019-03-07 07:31 GMT   |   Update On 2019-03-07 07:31 GMT
டெல்லியில் பள்ளி வகுப்பறையில் தோழியின் பாட்டிலில் இருந்த ஆசிட் போன்ற திரவத்தை, தண்ணீர் என நினைத்து குடித்த மாணவி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #DelhiSchoolGirlDead
புதுடெல்லி:

டெல்லியின் ஹர்ஷ் விகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 5ம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா(11). நேற்று மதியம் வகுப்பறையில் சக மாணவியின் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில், பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு, ஓடிச் சென்று வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி, அருகிலிருந்த ஆசிரியர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு விரைந்து, விசாரணை நடத்தினர். உடனடியாக தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். பள்ளிக்கு விரைந்த நிபுணர்கள், மாணவி தூக்கி எறிந்த பாட்டிலை சோதனை செய்தனர். அந்த பாட்டிலில் இருந்து வெளிப்பட்ட தண்ணீர் நிறம் மாறி காணப்பட்டது. இதையடுத்து அது ஆசிட்டாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவியின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். #DelhiSchoolGirlDead
Tags:    

Similar News