செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு பேட்டி

Published On 2019-02-17 01:29 GMT   |   Update On 2019-02-17 01:29 GMT
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், பாடம் கற்பிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VenkaiahNaidu #PulwamaAttack
பிரயாக்ராஜ்:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கங்கையில் புனித நீராடினார். பின்னர் அங்குள்ள புகழ் பெற்ற அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது. பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளை வேருடன் அகற்றுவதற்கு இதுவே சரியான தருணம். பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி தரவேண்டும்.

உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் ஆகிவிடக்கூடாது. இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதற்குரிய பலனை திருப்பித்தர வேண்டும். பயங்கரவாதிகள் நம்மை பயமுறுத்தவும், நமது துணிச்சலை குறைக்கவும் விரும்புகிறார்கள். எனவே நாம் துவண்டுவிடவும் கூடாது, பலமிழந்துவிடவும் கூடாது.

அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கே நாம் திருப்பித்தர வேண்டும். இதுபோன்ற கோழைத்தனமான செயலை அவர்கள் மீண்டும் செய்வதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கும் வகையில் இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய நாடு. இந்தியா முதலில் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை என்பதற்கு வரலாறே சான்றாக உள்ளது.

உலக நாடுகளின் மக்கள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். ஆனால் அது எந்த நோக்கத்தையும் பூர்த்தி செய்யாது. இந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News