செய்திகள்
குருவாயூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

குருவாயூர் கோவிலில் 207 ஜோடிகளுக்கு ஒரேநாளில் திருமணம்

Published On 2019-02-11 05:07 GMT   |   Update On 2019-02-11 05:07 GMT
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூர் கோவிலில் நேற்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. #Guruvayurtemple
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீகிருஷ்ண சாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. அதே போல குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் அதிக அளவு நடைபெறும்.

கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் குருவாயூர் கோவிலில் வந்து திருமணம் செய்வது, குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுவது போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று குருவாயூர் கோவிலில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

தை மாத வளர்பிறையில் வரும் கடைசி முகூர்த்தம் என்பதால் இந்த அளவுக்கு திருமணம் அங்கு நடைபெற்று உள்ளது. முகூர்த்த நேரமான காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை 3 மணி நேரத்தில் 207 ஜோடிகளும் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இதன் காரணமாக திருமண வீட்டாரும், பக்தர்களும் திரண்டதால் குருவாயூர் கோவிலில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

அதேபோல நேற்று ஒரே நாளில் 851 குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் நடந்தது. #Guruvayurtemple
Tags:    

Similar News