செய்திகள்

அயோத்தியில் 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

Published On 2019-01-29 11:02 GMT   |   Update On 2019-01-29 11:02 GMT
அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தை சுற்றி, வாங்கப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்க அனுமதிக்கும்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. #SC #AyodhyaCase #AyodhyaDisputeSite
புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலப்பகுதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் இருந்து மத்திய அரசு கடந்த 1991-ம் ஆண்டு வாங்கியது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தைச் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அஹாரா, ராம் லாலா ஆகிய 3 குழுக்கள் சமமாக பிரித்துக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  

இந்த வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி பாப்தே வராததால் விசாரணை ரத்து செய்யப்பட்டது. எப்போது விசாரணை நடைபெறும் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “கடந்த 1991-ம் ஆண்டு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியைச் சுற்றி 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வாங்கி இருந்தது. அந்த நிலப்பகுதியை உண்மையான உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவை விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்து விஎச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், "அயோத்தியில் அரசு வாங்கியுள்ள 67 ஏக்கர் நிலம் ராம் ஜென்மபூமி நயாஸ்க்கு உரிமையானது. அதில் எந்தவிதமான சட்டச்சிக்கலும் இல்லை. அதைத் திரும்ப ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பது சரியான நடவடிக்கை. அதனை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர, அதைச் சுற்றி உள்ள நிலத்தை விடுவிக்கப்பட்டால், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SC #AyodhyaCase #AyodhyaDisputeSite
Tags:    

Similar News