செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியா? - நடிகை கரீனா கபூர் விளக்கம்

Published On 2019-01-23 05:24 GMT   |   Update On 2019-01-23 05:24 GMT
பாராளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடுவதாக வெளியாக தகவல் குறித்து பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். #ParliamentElection #KareenaKapoor
பிரபல இந்தி நடிகை கரீனா கபூர். இவர் இந்தி நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற மகன் இருக்கிறார். சயீப் அலிகானின் தந்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி ஆவார். இவர் 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தற்போது பட்டோடி குடும்பத்தை சேர்ந்த நடிகை கரீனா கபூரை போபால் தொகுதியில் களம் இறக்க அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர். போபால் காங்கிரஸ் கவுன்சிலர் யோகேந்திர சிங் கூறும்போது, “போபால் தொகுதியில் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து கைப்பற்ற புதுமுகத்தை இறக்க வேண்டும். கரீனா கபூர் இந்த மண்ணின் மருமகளாகி விட்டதால் அவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இதை கரீனா கபூர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்” என்றார்.

இதற்கு கரீனா கபூர் விளக்கம் அளித்து கூறும்போது, “என்னை தேர்தலில் போட்டியிடும்படி எந்த கட்சியும் அழைத்தாலும் கூட அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. நான் அரசியல் கட்சியில் இணையப் போவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன்” என்றார்.  #ParliamentElection #KareenaKapoor
Tags:    

Similar News