செய்திகள்
சபரிமலையில் தரிசனம் செய்த திருநங்கைகளை படத்தில் காணலாம்.

சபரிமலையில் இன்று 18ம் படி வழியாக சென்று ஐயப்பனை வழிபட்ட 4 திருநங்கைகள்

Published On 2018-12-18 08:06 GMT   |   Update On 2018-12-18 08:06 GMT
சபரிமலையில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு சென்ற திருநங்கைகள் 4 பேரும் 18-ம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். #SabarimalaTemple #Transgender
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இதை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்துள்ளது. ஆனாலும் பக்தர்கள் போராட்டம் காரணமாக இதுவரை இளம்பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி சபரிமலைக்கு எரிமேலி வழியாக அனன்யா, திருப்தி, ரெஞ்சுமோள், அவந்திகா ஆகிய 4 திருநங்கைகள் கருப்புச் சேலை அணிந்து தலையில் இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருந்தனர். இவர்களை இளம்பெண்கள் என்று நினைத்து ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திருநங்கைகளை திருப்பி அனுப்பினர். இதைத்தொடர்ந்து திருநங்கைகள் 4 பேரும் கேரள போலீஸ் ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாமை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில் தங்களை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அதேபோல சபரிமலை நிலவரத்தை ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட்டு நியமித்த குழுவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரனிடமும் இந்த திருநங்கைகள் மனு கொடுத்தனர்.

திருநங்கைகள் சபரிமலையில் செல்ல கோர்ட்டு தடை எதுவும் இல்லாததால் அவர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த திருநங்கைகள் 4 பேரும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய போலீசார் அனுமதி வழங்கினர்.



இன்று காலை 8 மணிக்கு திருநங்கைகள் 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்கு சென்றனர். கருப்பு சேலை அணிந்து, தலையில் இருமுடி கட்டுடன் சென்ற அவர்கள் 18-ம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். நெய் அபிஷேகமும் செய்தனர்.

பின்னர் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் பகல் 11.30 மணி அளவில் அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

இதுபற்றி திருநங்கைகள் கூறுகையில் திருநங்கைகளாக பிறந்த எங்களுக்கு இன்று சபரிமலையில் தரிசனம் செய்ததன் மூலம் விமோசனம் கிடைத்துள்ளது. சேலை எங்களுக்கு சவுகரியமான ஆடை. அதனால் அதனை அணிந்து கோவிலுக்கு வந்தோம். எங்களுக்கு இன்று சிறப்பான தரிசனம் கிடைத்தது. அதற்கு உதவி செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.  #SabarimalaTemple #Transgender



Tags:    

Similar News