செய்திகள்

சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றார்

Published On 2018-12-17 13:30 GMT   |   Update On 2018-12-17 14:36 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மாநில கவர்னர் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். #Chhattisgarh #bhupeshbaghel
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.

தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் நடந்தது. டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டார்.



இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் உள்ள புதாதலாப் பகுதியில் உள்ள பல்பீர் சிங் ஜுனேஜா உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றுக்கொண்டார். அம்மாநில கவர்னர் (பொறுப்பு) ஆனந்திபென் படேல் அவருக்கும் இதர மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #Chhattisgarh #bhupeshbaghel
Tags:    

Similar News