செய்திகள்

திருப்பதி கோவிலில் ரூ.2 கோடி செலவில் அறிவிப்பு பலகைகள்

Published On 2018-10-27 04:47 GMT   |   Update On 2018-10-27 04:48 GMT
திருப்பதி கோவிலில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.2 கோடி செலவில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
திருமலை:

திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் வழியாக தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

தரிசன வரிசைகள் நிரம்பியுள்ள நேரத்தில் அவர்கள் தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் காத்திருக்கும்போது அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் நேரம், அவர்களுக்கு அன்னதானம், நீராகாரம், சிற்றுண்டி வழங்கும் நேரம், வாடகை அறைகள் பெறக் காத்திருக்க வேண்டிய நேரம், உடமைகள் பெறுதல், கைபேசி பெறுதல், உணவு கவுன்ட்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ள இடங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தெரிவிக்கப்படும்.

அதற்கான அறிவிப்புப் பலகைகள் கோவில் வளாகத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள், கருடாத்திரி நகர் சோதனைச் சாவடி, அலிபிரி சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

இதற்காக தேவஸ்தானம் ரூ.2 கோடி செலவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி கோவிலில் 64,890 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29,678 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.

காலை நிலவரப்படி 29 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்திற்கு 19 மணிநேரம் ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு மற்றும் விரைவு தரிசனத்திற்கு தலா 3 மணி நேரம் தேவைப்பட்டது.

நேற்று முன்தினம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.42 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
Tags:    

Similar News