செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண் - மும்பையில் பரபரப்பு

Published On 2018-10-15 06:09 GMT   |   Update On 2018-10-15 06:09 GMT
மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #AirIndia #AirHostessFallsOff
மும்பை:

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்து சரிபார்க்கப்பட்டதும், விமானத்தின் கதவு மூடப்பட்டது. அப்போது கதவின் அருகே நின்றுகொண்டிருந்த பணிப்பெண் திடீரென தவறி வெளியே விழுந்தார்.

இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘டெல்லி புறப்பட்ட ஏஐ-864 விமானத்தின் கதவை மூடியபோது, எங்கள் ஊழியர்களில் ஒருவரான ஹர்ஷா லோபோ (வயது 53) எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார். இது துரதிர்ஷ்டவசமானது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே விமான நிலையத்தில், சிக்னல் கிடைத்ததாக தவறாக நினைத்து ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினை பைலட் இயக்கியதால், அருகில் நின்றிருந்த பொறியாளர் என்ஜினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #AirIndia #AirHostessFallsOff
Tags:    

Similar News