செய்திகள்

காஷ்மீரில் மீண்டும் ரெயில் சேவை நிறுத்தம் - பிரிவினைவாதிகள் போராட்டத்தால் நடவடிக்கை

Published On 2018-10-12 03:49 GMT   |   Update On 2018-10-12 04:14 GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் போராட்டம் நடத்துவதால், இன்றும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. #KashmirTrainService #JKMilitantsKilled
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல்  தொடங்கி நடைபெற்று வருகிறது. நகராட்சி அமைப்புகளுக்கான 4 கட்ட தேர்தலில் முதல் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்தலை இரண்டு முக்கிய கட்சிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் புறக்கணித்ததால் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி வாக்குப்பதிவு நடைபெற்ற இரண்டு நாட்களும் (திங்கள், புதன்) ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் நடந்த மோதலில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக்கொன்றனர். இதனைக் கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் இன்றும் பாதுகாப்பு கருதி ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.



‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் தெற்கு காஷ்மீரின் பத்காம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-காசிகந்த் பகுதியில் இருந்து ஜம்மு பிராந்தியத்தின் பனிஹால் பகுதிக்கு எந்த ரெயிலும் இயக்கப்படமாட்டாது. இதேபோல் வடக்கு காஷ்மீரில் ஸ்ரீநகர்-பத்காம் வழித்தடத்திலும், பாரமுல்லா பகுதியிலும் ரெயில்கள் இயக்கப்படமாட்டாது’ என ரெயில்வேயின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

பிரிவினைவாதிகள் போராட்டம் காரணமாக இந்த வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KashmirTrainService #JKMilitantsKilled

Tags:    

Similar News