செய்திகள்

இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

Published On 2018-09-26 05:10 GMT   |   Update On 2018-09-26 05:10 GMT
இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார். #MukeshAmbani
ஹூரன் மற்றும் பார்க்ளேஸ் ஆகிய நிதிச்சேவை நிறுவனங்கள் இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹூரன் இந்தியா ரிச் லிஸ்ட் (2018) என்ற அந்தப் பட்டியலில் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.1,000 கோடி அளவிற்கு கொண்ட 831 இந்தியர்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தப் பட்டியலில் மேலும் 214 இந்தியர்கள் இணைந்துள்ளனர். இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் அவர் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.3.71 லட்சம் கோடியாகும். இந்நிலையில் இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக நீடிக்கும் அவர், போர்ப்ஸ் வெளியிட்ட சர்வதேச மெகா பணக்காரர்கள் பட்டியலில் 19-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டில் அவர் 33-வது இடத்தில் இருந்தார்.



இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானியை அடுத்து எஸ்.பி. இந்துஜா மற்றும் குடும்பத்தினர், எல்.என். மிட்டல் மற்றும் குடும்பத்தினர், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி மற்றும் சன் பார்மாசூட்டிக்கல்ஸ் அதிபர் திலீப் சாங்வி ஆகியோர் உள்ளனர்.

ரூ.1.59 லட்சம் கோடி சொத்துடன் இந்துஜா குடும்பத்தினர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். எல்.என். மிட்டல் மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.1.15 லட்சம் கோடியாகும். இதன்படி அவர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ரூ.96,100 கோடி டாலர் சொத்துடன் அசிம் பிரேம்ஜி நான்காவது இடத்திலும், ரூ.89,700 கோடி மதிப்புடன் திலீப் சாங்வி ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருப்பதை ஹூரன்-பார்க்ளேஸ் பட்டியல் சுட்டிக்காட்டி உள்ளது. தற்போதைய பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும் கோடீஸ்வரர்களில் 50 சதவீதத்தினரின் நிறுவனங்கள் குடும்ப நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருபவை ஆகும். #MukeshAmbani
Tags:    

Similar News