செய்திகள்

கோவா மாநிலத்தில் 2 மந்திரிகள் நீக்கம் - மனோகர் பாரிக்கர் நடவடிக்கை

Published On 2018-09-24 07:49 GMT   |   Update On 2018-09-24 07:49 GMT
மந்திரி சபையில் மாற்றங்கள் செய்யப்படும் என அமித்ஷா கூறியிருந்த நிலையில் கோவா அமைச்சரவையில் இருந்து 2 மந்திரிகளை மனோகர் பாரிக்கர் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். #manoharparrikar
பானாஜி:

கோவாவில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் தாக்கியது. அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

நாடு திரும்பி முதல்வர் பணியை கவனித்து வந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே முதல்- மந்திரி பதவியில் இருந்து பாரிக்கரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கோமந்தக்கட்சி தங்களுக்கு முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று கோரியது.

ஆனால் பா.ஜ.க. இதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கோவா சென்ற பா.ஜ.க. தலைவர் அமித்ஷா முதல்-மந்திரி பதவியில் இருந்து பாரிக்கர் மாற்றம் செய்யப்படமாட்டார் என்று அறிவித்தார்.


மந்திரி சபையில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அதை உறுதிப்படுத்துவது போல இன்று கோவா அமைச்சரவையில் இருந்து 2 மந்திரிகளை மனோகர் பாரிக்கர் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவர் உத்தரவின்பேரில் மந்திரிகள் பிரான்சிஸ் டிசவுஷா, பாண்டுரங் மட்கைகர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரான்சிஸ் டிசவுஷா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். பாண்டுரங்குக்கு மூளையில் நோய் ஏற்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் உள்ளார்.

இதனால் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் நிலேஷ் மற்றும் மிலண்ட்நாயக் இருவரும் புதிய மந்திரிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை அவர்கள் பதவி ஏற்கிறார்கள்.  #GoaCM #manoharparrikar  #GoaCabinet
Tags:    

Similar News