செய்திகள்

கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்கிறது - சித்தராமையா குற்றச்சாட்டு

Published On 2018-09-18 19:20 GMT   |   Update On 2018-09-18 20:10 GMT
ஆட்சியை கலைப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்வதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #Siddaramaiah
பெங்களூரு :

கட்நாட சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு குமாரசாமி ஆட்சி அமைத்தார். அவர் முதல்வராக பொறுப்பேற்றது முதலாக குமாரசாமி தலைமையிலான ஆட்சி நீண்ட காலம் நிலைக்காது என அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.

காங்கிரஸ் அமைச்சர்களான சதீஸ் ஜர்கிஹோலி மற்றும் சிவக்குமார் இடையே பெலகாவி மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பெலகாவியில் தனது சகோதரருடன் சேர்ந்து செல்வாக்கை நிலைநாட்ட விரும்பும் சதீஸ் ஜர்கிஹோலிக்கு எதிராக எம்.எல்.ஏ லக்‌ஷ்மி ஹெப்பால்கரை அமைச்சர் சிவக்குமார் கொம்பு சீவி விடுவதாக கூறப்படுகிறது. இதனால், சதீஸ் ஜர்கிஹோலி சகோதரகள் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் பாரதிய ஜனதா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் எவ்வித அதிருப்தியும் இல்லை என ஊடகங்களிடம் முன்னாள் முதல்வர் சித்தரமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் எவ்வித அதிருப்தியும் இல்லை, எங்களிடையே அதிருப்தி இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சிலரை தொடர்பு கொண்டு பாரதிய ஜனதா கட்சியினர் பேசியுள்ளனர்.

இந்த ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்வது உண்மை. அதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பது உள்பட எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராக உள்ளனர்.

கர்நாடக மந்திரிசபையில் இன்னும் 6 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அந்த இடங்களில் புதிய மந்திரிகளை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோனை செய்ய முதல்வர் குமாரசாமி நாளை(இன்று) டெல்லி பயணம் செய்ய உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #Siddaramaiah
Tags:    

Similar News