செய்திகள்

ஜம்மு என்கவுண்டர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, 12 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்

Published On 2018-09-13 11:56 GMT   |   Update On 2018-09-13 11:56 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காக்ரியா பகுதியில் இன்று நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 12 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். #JammuKashmir #Kakriyal
ஸ்ரீநகர்:

ஜம்மு நகருக்கு அருகில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள காக்ரியா பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று புகுந்ததாக தகவல்கள் வெளியானது. அந்த பகுதியிலுள்ள கிராமவாசி ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் புகுந்து, மாற்றுவதற்கு வேறு உடைகளை தரும்படி கேட்டுள்ளதுடன், உணவு தரும்படியும் கேட்டுள்ளனர்.  

தங்களுக்கு வாகனம் கிடைக்க ஏற்பாடு செய்தால் பணம் தருகிறோம் என்றும் அவரிடம் பயங்கரவாதிகள் கூறியுள்ளனர்.

இதுபற்றி கிராமவாசி போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதிகளின் ஊடுருவலை அடுத்து நக்ரோட்டா-ஜஜ்ஜார் கொத்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  அந்த பகுதியில் உள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.  இதில் மத்திய ரிசர்வ் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் தீவிரவாதிகளை நெருங்கினர்.

இந்த வேட்டையில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர். இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 12 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Tags:    

Similar News