செய்திகள்

ஆடு, மாடுகளும் ஆதார் எண்ணுடன் இணைப்பு - குஜராத் இதிலும் முதலிடம்?

Published On 2018-09-09 13:20 GMT   |   Update On 2018-09-09 13:20 GMT
குஜராத் மாநிலத்தில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைத்து நடவடிக்கை எடுக்கு திட்டத்தை சூரத் நகராட்சி மேற்கொண்டுள்ளது. #Aadhaar
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் வைர நகரம் என்றழைக்கப்படும் சூரத் நகரம் பட்டுத் துணி உற்பத்தி மற்றும் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிலுக்கு மிகவும் பிரசித்தியான நகரமாகும்.

இந்நகரில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை நகராட்சி அலுவலக பணியாளர்கள் பிடித்து சென்று கொட்டடியில் அடைத்து வைக்கின்றனர். உரிமையாளர் தேடிவரும்போது அபராத தொகையை பெற்றுகொண்டு அவற்றை விடுவித்து வந்தனர்.

பிடிபட்ட முதல் நாளில் முதல் முறையாக பிடிப்பட்டால் 1800 ரூபாய் அபராதம், மேலும் கொட்டடி கட்டணமாக ஆயிரம் ரூபாயும், தீவனம் மற்றும் பராமரிப்பு செலவுக்கென 650 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நான்காவது முறையாக பிடிபட்டால் உரிமையாளர்களிடம் கால்நடைகள் ஒப்படைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடித்து கொண்டு செல்லும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கால்நடைகளை பிடித்து செல்ல வாகனங்களில் வரும் நகராட்சி பணியாளர்களுக்கும் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதமும், மோதலும் கூட நடப்பதுண்டு.

இந்நிலையில், ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘பல்லேலக்கா, பல்லேலக்கா’ பாட்டின் சரணத்தில் வரும் ‘ஏலே.. ஆடு, மாடு மேலே உள்ள பாசம், வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்’ என்னும் பாடல் வரியைப்போல், கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அவற்றின் உரிமையாளர்களின்  ஆதார் எண்ணுடன் இணைத்து நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை சூரத் நகராட்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக, தங்களிடம் பிடிபடும் கால்நடைகளின் காதுகளில் வரிசை எண்ணுடன் கூடிய பிளாஸ்டிக் பட்டைகளை இணைத்து அதை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் அதிகாரிகள் இணைத்துள்ளனர்.

இதன் மூலம் கால்நடைகள் பிடிபட்டதும் உடனடியாக அவற்றின் உரிமையாளர்களை கண்டுபிடிக்கவும், அபராதம் விதிக்கவும் வசதியாக உள்ளதாக சூரத் நகராட்சி உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
இதுவரை சுமார் 25 ஆயிரம் கால்நடைகள் அவற்றின் உரிமையாளர்களான சுமார் 1500 பேரின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும்,  25 ஆயிரம் கால்நடைகள் விரைவில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Aadhaar
Tags:    

Similar News