செய்திகள்

பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலெக்டருக்கு குவியும் பாராட்டுகள்

Published On 2018-09-06 13:01 GMT   |   Update On 2018-09-06 13:01 GMT
தான் வகித்து வரும் பதவியை மறைத்து, கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #KeralaFloods #ReliefService #KannanGopinath
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கடந்த நூறு ஆண்டுகளில் சந்திக்காத பேரழிவை சமீபத்தில் பெய்த கனமழையால் சந்தித்தது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 488 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
ராணுவப் படையினரும், கேரள மீனவர்களும் தக்க சமயத்தில் வெள்ளத்தை வென்று மக்களை மீட்டனர். 

இதையடுத்து, மத்திய அரசு மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் வெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு உதவிக்கரங்களை நீட்டின.

இந்நிலையில், தான் வகித்து வரும் பதவியை மறைத்து, கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தான் யார் என்பதையே மறைத்தும் மறந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கண்ணன் கோபிநாத். 

இவர் தங்கள் யூனியன் பிரதேசம் சார்பாக கேரளாவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடியை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்க ஆகஸ்ட் 26-ம் தேதி கேரளா வந்தார். 

இவரது வீடு கேரளாவின் புதுபள்ளியில் உள்ளது. பணத்தை ஒப்படைத்த பின்னர் அங்கு செல்லலாம் என்று நினைத்த அவர், கேரளாவின் நிலையை பார்த்துவிட்டு நேராக திருவனந்தபுரம் சென்றார்.

அங்கிருந்து பல முகாம்களுக்கு சென்ற அவர் தொடர்ந்து 10 நாட்களாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.  அதைத்தொடர்ந்து, தனது ஐஏஎஸ் பணிகளை தொடர அங்கிருந்து சத்தமின்றி புறப்பட்டுச் சென்றார்.

கேரளா வந்த அடுத்த நாளே மீட்புப் பணிகளுக்காக கண்ணன் விடுப்பு பெற்றுவிட்டார். ஆனால் அவர் மீட்புப் பணியில் ஈடுபடுகிறார் என்பதை அறிந்த அரசு நிர்வாகம், அவரது விடுப்பு நாள்களை வேலை செய்த நாட்களாக கணக்கெடுத்துக் கொண்டது.

தான் வகித்து வரும் பதவியை மறைத்து சாதாரண மக்களுடன் மக்களாக நின்று நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலெக்டர் கண்ணன் கோபிநாத்துக்கு கேரள மக்கள் மட்டுமின்றிஅனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். #KeralaFloods #ReliefService #KannanGopinath
Tags:    

Similar News