செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.7.94 கோடிக்கு ஏலம்

Published On 2018-09-01 10:36 GMT   |   Update On 2018-09-01 10:36 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ரூ.7.94 கோடிக்கு ஏலம் போனது. #TirupatiTemple
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் முதலில் கல்யாண கட்டாவில் தலைமுடி காணிக்கை செலுத்திய பின்னர் நீராடிவிட்டு தரிசனம் செய்கின்றனர். தினமும் பக்தர்கள் செலுத்தும் தலைமுடி டன் கணக்கில் சேருகிறது.

இந்த தலைமுடிகள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு இ-டெண்டர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நேற்று இ-டெண்டர் மூலம் தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு மூலம் ஏலம் விடப்பட்டது. இதில் 31 இன்ச் நீளம் வரை உள்ள தலைமுடிக்கு கிலோ ரூ.22 ஆயிரத்து 94 என்ற விலையில் 8 ஆயிரத்து 300 கிலோ ஏலத்துக்கு வைக்கப்பட்டது. இந்த ஏலத்தில் 1, 600 கிலோ தலைமுடி ரூ.3 கோடியே 56 லட்சத்துக்கு ஏலம் போனது.

அதேபோல் 16 இன்ச் முதல் 30 இன்ச் வரை உள்ள தலைமுடி கிலோ ரூ.17 ஆயிரத்து 223 என்ற விலையில் மொத்தம் 2 ஆயிரம் கிலோ ஏலம் விடப்பட்டது. இந்த ரக தலைமுடி 2 ஆயிரம் கிலோ ரூ.3 கோடியே 44 லட்சத்துக்கு ஏலம் போனது.

3-வது ரக தலைமுடி 10 இன்ச் முதல் 15 இன்ச் வரை உள்ளது தரம்பிரிக்கப்பட்டு கிலோ ரூ.5 ஆயிரத்து 462 என்ற விலையில் 3 ஆயிரத்து 14 கிலோ ஏலம் விடப்பட்டது.

இந்த ரகம் மொத்தம் 1,200 கிலோ ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதேபோல் 1200 கிலோ வெள்ளை தலைமுடி ரூ.65 லட்சத்து 85 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மேலும் சில ரக தலைமுடிகளும் ஏலம்போனது.

இவ்வாறு தலைமுடி மொத்தம் ரூ.7 கோடியே 94 லட்சத்துக்கு ஏலம்போனதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.  #TirupatiTemple
Tags:    

Similar News