செய்திகள்

வெள்ளத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வங்கி கடன் - பினராயி விஜயன்

Published On 2018-08-31 11:18 GMT   |   Update On 2018-08-31 11:18 GMT
கேரள மாநிலத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு வர்த்தகர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaReliefFund
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 28-ந் தேதி தொடங்கியதில் இருந்து மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது. ஆண்டு திட்ட மதிப்பீடான ரூ.37,247.99 கோடியைவிட இழப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், அவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-

மறுசீரமைப்பு பணிகளுக்காக மாநிலத்தில் உள்ள 10 முதல் 15 மாவட்டங்களில் செப்டம்பர் 3-ம் தேதி நிவாரண நிதி திரட்டும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்யும் இந்த கூட்டங்களில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மாநில மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர்.

இதைப்போன்று பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நிவாரண நிதி திரட்டும் கூட்டங்கள் செப்டம்பட் 11-ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளன.

வெள்ளத்தால் சேதங்களை சந்தித்த சிறு குறு தொழிலாளர்களுக்கு புனரமைப்பு நிதியாக ரூ.10 லட்சம் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லாத கடன் வழங்கப்பட உள்ளது. இதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த தகவல்களை டிஜிட்டல் முறையில் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

சபரிமலை யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக பம்பை மற்றும் சபரிமலையில் சேதமடைந்துள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் பாதைகள் சீரமைக்கப்பட்டும், இதற்காக உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.1027 கோடி கிடைத்துள்ளது. இதில், ஆன்லைன் மூலமாக 4.17 லட்சம் பேர் நிதியுதவி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaReliefFund
Tags:    

Similar News