செய்திகள்

கேரள மக்களின் துயரத்தில் 125 கோடி இந்தியர்களும் இணைந்துள்ளனர் - மோடி உருக்கம்

Published On 2018-08-26 08:53 GMT   |   Update On 2018-08-26 08:53 GMT
வெள்ள பாதிப்பால் நிலைகுலைந்துள்ள கேரள மக்களின் துயரத்தில் 125 கோடி இந்தியர்களும் இணைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார். #MannKiBaat #KeralaFloods
புதுடெல்லி:

2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ’மான் கி பாத்’ என்னும் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றி வருகிறார்.

இன்றைய 47-வது ’மான் கி பாத்’ நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

‘துரதிஷ்டவசமாக, இயற்கை பேரிடர்கள் மிகப்பெரிய அழிவின் பாதிப்பை விட்டுச் செல்கிறது. இதைப்போன்ற பேரழிவுக் காலங்களில் மனிதம் மற்றும் மனிதநேயத்தை ஒருவரால் காணவும் முடிகிறது.

கேராளாவாகட்டும், நாட்டின் எந்தப்பகுதி ஆகட்டும், இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, விரைவில் அங்கு இயல்பு நிலை திரும்பும் வகையில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய துடிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் வலியில் பங்கெடுத்துகொள்ள முன்வருகிறார்கள்.

கேரளாவில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட நமது தேசிய பேரிடர் மீட்பு படை, விமானப்படை, கடல்படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, சிறப்பு அதிரடிப் படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் தங்களது அபாரமான செயல்பாடுகளால் ஒவ்வொரு இந்தியரின் பார்வையையும் தங்கள் பக்கம் ஈர்த்திருந்தனர். அவர்களின் சிறப்புக்குரிய சேவைகள் பாராட்டத்தக்கதாகும்.

இன்றைய இறுக்கமான, கடினமான காலகட்டத்தில் கேரளாவுடன் இந்த ஒட்டுமொத்த நாடும் உள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடன் நமது அனுதாபங்கள் கலந்துள்ளது. உயிரிழப்புகளை நிவாரணங்களின் மூலம் ஈடுசெய்து விட முடியாது.

ஆனால், 125 கோடி இந்தியர்களும் உங்களது துயரங்களில், சோகத்தில் உங்கள் தோளோடு தோளாக நிற்போம் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த இயற்கை பேரழிவில் காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய மனதார பிரார்த்திக்கிறேன்.

அங்குள்ள மக்களும் மனவலிமையும், தீரமும் கேரளா மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்’.

இவ்வாறு அவர் பேசினார். #MannKiBaat #KeralaFloods
Tags:    

Similar News