செய்திகள்

கேரளாவில் துயர் துடைப்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை ரூ.20 கோடி நிதியுதவி

Published On 2018-08-25 09:06 GMT   |   Update On 2018-08-25 09:06 GMT
வெள்ளச் சேதத்தில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பிவரும் கேரள மாநில துயர் துடைப்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை சார்பில் இன்று 20 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. #Keralafloods #IAFdonates
திருவனந்தபுரம்:

‘கடவுளின் நாடு’ என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் இந்த மாதம் இயற்கை ஆடிய கோரத்தாண்டவத்துக்கு 300-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். பல மாவட்டங்களில் விளைபொருட்கள் நாசமாகின.



வெள்ளப்பெருக்கில் லட்சக்கணக்கான வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் சேதமடைந்துள்ளன. வெள்ளம் வடிய தொடங்கிய பின்னர் செய்யப்பட்ட ஆய்வின்படி 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த வெள்ளத்தினால் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கேரள அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அனைத்து  மாநில அரசுகளும் நிதியுதவி அளித்துள்ளன. மேலும், தனியார் நிறுவனங்களும் வங்கிகள் உள்ளிட்ட அரசுதுறை சார்ந்த நிறுவனங்களும் நிதியுதவி செய்து வருகின்றன.

அவ்வகையில், கேரள மாநில துயர் துடைப்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை சார்பில் இன்று 20 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் நகரில் இன்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்த தென்னக விமானப்படை தளபதி ‘ஏர் மார்ஷல்’ பி.சுரேஷ் 20 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய பல்லாயிரம் உயிர்களை மீட்க பெருந்துணையாக இருந்த விமானப்படை சார்பில் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Keralafloods #IAFdonates 
Tags:    

Similar News