செய்திகள்

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை

Published On 2018-08-21 11:30 GMT   |   Update On 2018-08-21 11:30 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் 14 வயது குற்றவாளிக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #14yroldboy #7hrtrial
இந்தூர்:

மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம், கட்டியா கிராமத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று சில குழந்தைகளுடன் ஒரு சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்ததை கண்ட 14 வயது சிறுவன், அந்த பெண்ணை தனது வீட்டுக்குள் அழைத்து சென்று கற்பழித்து விட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் தலைமறைவாகிவிட்ட சிறுவனை தேடிவந்த உஜ்ஜைன்  மாவட்ட போலீசார் அருகாமையில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர்.

இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட சிறுவன் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் இளம்சிறார் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களும் குற்றப்பத்திரிகையும் நேற்று காலை 10.45 மணியளவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்றிரவு 6 மணிவரை தொடர்ந்து விசாரித்த நீதிபதி திரிப்தி பான்டே, ‘நாளுக்கு நாள் சிறுமியர்களுக்கு எதிரான கற்பழிப்புகளும், பாலியல் பலாத்காரங்களும் பெருகிகொண்டே வரும் நிலையில் குற்றவாளிக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன்’ என தீர்ப்பளித்தார்.

மத்தியப்பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் குற்றவாளி இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கடந்த 2012-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பின்னர், வெறும் 7 மணி நேரத்துக்குள் வெகு விரைவாக இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதியை இவ்வழக்கில் ஆஜராகி வாதாடிய அரசுதரப்பு வக்கீல் தீபேந்திரா மல்லு பாராட்டியுள்ளார். #14yroldboy #7hrtrial 
Tags:    

Similar News